† அருளடையாளங்கள் ஓர் விரிவான பார்வை †
அருளடையாளங்கள் என்னும் பதிவின் ஊடாக ஒரு முழுமையான விளக்கத்தை தர முற்படுகிறோம்; இப்பதிவு திருவருட்சாதனங்கள் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை அளிப்பதாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
மனிதன் தனது எண்ணங்களை, ஏக்கங்களை, விழுமியங்களை சடங்குகள் வழியாக வெளிப்படுத்துகின்றான். ஒரு சமூகமும் அவ்வாறே செயலாற்றுகின்றது. ஒவ்வொரு மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து மதங்களிலும் தமது நம்பிக்கை வாழ்வை கட்டி எழுப்ப சடங்குகள் அவசியமாகின்றது. இச்சடங்குகளிலே அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கிறிஸ்தவ சமூகத்தின் அடிப்படைச் சடங்குகளை 'அருளடையாளங்கள்" என்கின்றோம். எல்லாச் சடங்குகளும் மனித வாழ்வின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளிக் கொணரும் மனித ஊடகங்கள்.
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே ஒரு மாபெரும் அடையாளமாகத் திகழ்கின்றார். தந்தையாம் இறைவனின் அன்பின், மன்னிப்பின் உறுதியான அடையாளமாக கிறிஸ்து இருக்கின்றார். கிறிஸ்து செய்த புதுமைகளைக் கூட நற்செய்தியாளர் தூய யோவான் அருளடையாளமாகவே காட்டுகின்றார். (உ+ம் : கானாவூரில் இயேசு தண்ணீரை இரசமாக்கினார். இது இயேசு செய்த முதல் அருள் அடையாளம். 2:11)
மனித வாழ்வில் அன்பை, உறவை வெளிப்படுத்த, பகிர்ந்து கொள்ள அடையாளங்கள் தேவை. உ+ம் : தன் பிள்ளையின் மேலுள்ள பாசத்தை ஒரு தாய் முத்தமிடுதல் வழியாக வெளிப்படுத்துவார். அதுபோலவே இறை - மனித உறவில் இறைவனின் அன்பை வெளிப்படுத்த மனித வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்வுச் சூழல்களுக்கு ஏற்ற வகையில் இறையருளை வழங்கும் அடையாளங்கள் அருள் அடையாளங்களாகும். இதனை முன்னர் 'தேவதிரவிய அனுமானம்" என்றழைத்தோம். பின் 1960களில் 'திருவருட்சாதனம்" என்றோம். தற்காலத்தில் 'அருளடையாளம்" என்போம். இதற்கு நாம் வரைவிலக்கணம் கொடுப்போமெனில், மிகவும் இலகுவாக புரிந்து கொள்ள, "உள் அருளின் வெளி அடையாளம்" அருளடையாளம் எனலாம்.
(உ+ம் : திருமுழுக்கின் போது தலையில் தண்ணீர் ஊற்றப்படுதல் வெளி அடையாளம், ஜென்மப் பாவக்கறை நீக்கப்படுவது உள் அருள்) புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே அருள் தரும் அடையாளங்களை ஏற்படுத்தினார். அவரே அவற்றில் நம்முடன் இருந்து, இறை அருளை பொழிகின்றார். ஒவ்வொரு அருளடையாளமும் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்ற பாஸ்கா மறைபொருள் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
அருளடையாளங்கள்.......தொடரும்.
Thanks to Gateway of Christianity
✠ இயேசுவைக் குறிக்கும் INRI அடையாளம்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது பிலாத்துவின் கட்டளைப்படி சிலுவையில் ஒரு குற்ற அறிக்கை எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் எழுதிவைக்கப்பட்டது. இலத்தீன் தொடர் "Iesous Nazarenus Rex Iudaeorum" என்றிருந்தது. அதன் சுருக்கச் சொல்லாக்கம் INRI என வரும் அதன் பொருள்: நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் என்பதாகும் (காண்க: யோவான் 19:19). இப்பெயர் வழக்கமாக இயேசுவைத் தாங்கும் சிலுவையில் எழுதப்பட்டிருக்கும்.