mandaitivu stp cc email


புனித வாரம்.
புனித வியாழன் - ஆண்டவரின் இராவுணவு.முதல் வாசகம்
இது ஆண்டவரின் பாஸ்கா
விடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம் 12:1-8, 11-14 
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.  ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.  ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.  இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.  இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.   நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ஆண்டவரின் பாஸ்கா .   ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!   இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.  இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக! 
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

பதிலுரைப் பாடல் 
 கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே
திருப்பாடல்கள் 116:12-13, 15-18

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர். பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி

இரண்டாம் வாசகம்
நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து வாசகம் 11:23-26


23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து,24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார்.25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார்.26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள். 
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

நற்செய்திக்கு முன்
யோவா 13: 34

`ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13:1-15 

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதி வரையும் அன்பு செலுத்தினார்.  இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில்,  தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்,  இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.  பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ' ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்? ' என்று கேட்டார்.  இயேசு மறுமொழியாக, ' நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய் ' என்றார். பேதுரு அவரிடம், ' நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன் ' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ' நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை ' என்றார்.  அப்போது சீமோன் பேதுரு, ' அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும் கூடக் கழுவும் ' என்றார். இயேசு அவரிடம், ' குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார்.   தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ' உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை ' என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ' நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?   நீங்கள் என்னைப் ' போதகர் ' என்றும் ' ஆண்டவர் ' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.  ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.   நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். 
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

முன்னுரைகள்:

இன்றைய வழிபாட்டுக் கொண்டாட்டத்திற்கு அன்புடனே வரவேற்கின்றோம்.

இன்றைய வழிபாட்டில் நாம் மூன்று மறைப்பேருண்மைகளை நினைவு கூர்கின்றோம்.

கிறிஸ்தவ பாஸ்காவாகிய நற்கருணையை இயேசு ஏற்படுத்தியது.

குருத்துவத்தை ஏற்படுத்தியது

சகோதர அன்புக் கட்டளையைக் கொடுத்தது


இந்த மறைப்பேருண்மைகளை நினைவுகூர்ந்து கொண்டாட இன்றைய நாளின் வாசகங்களும், செபங்களும், பாடல்களும், திருச்சடங்குகளும் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

இன்றைய வழிபாடு நான்கு பிரிவுகளைக கெண்டது.

தொடக்கச் சடங்கும், இறைவார்த்தை வழிபாடும்

பாதம் கழுவுதல்

நற்கருணைக் கொண்டாட்டம் (நன்றி வழிபாடு)

நற்கருணை இடமாற்றப்பவனி


முதலில் தொடக்கச் சடங்கும், இறைவார்த்தை வழிபாடும்

திருவருட்சாதனங்களின் மையமான நற்கருணையை ஏற்படுத்தியது இந்த நாளில் தான். ‘உலகம் முடியும் வரை உங்களோடு இருப்பேன்’ என்று வாக்களித்த இறைவன், அப்பத்தையும், இரசத்தையும் தன்னுடைய உடலாக, குருதியாக மாற்றி நமக்கு உணவாக, பானமாக தந்து நம்மோடு ஒன்றாக கலந்து வாழ்கின்றார்.

இந்த திருவருட்சாதனம் உலகம் முடியும் மட்டும் நிலைத்திருக்க ‘இதை என் நினைவாக செய்யுங்கள்’ என்று கூறி இச்செயலை தொடர தம் திருத்தூதர்களை குருகுலமாக ஏற்படுத்தி, குருத்துவம் என்ற திருவருட்சாதனத்தை ஏற்படுத்தி ஆசீர்வதிக்கின்றார். எனவே மகிழ்வுடனே இப்பலியில் கலந்து கொண்டு செபிப்போம். நம்முடைய குருக்களுக்காக செபிப்போம். இறை அழைத்தல் பெருகிட அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம். நற்கருணையில் இறைபிரசன்னம் மெய்யாகவே உள்ளதை உறுதிப்படுத்திட. விசுவாசத்தை அதிகரிக்க கேட்போம். நற்கருணையின் மெய்யான பிரசன்னத்திற்கு விளைவிக்கப்படுகின்ற அவசங்கைகளுக்கு இறைவனது இரக்கத்தை கேட்போம். பக்தியுடனே பலியிலே பங்கேற்போம்.

(ஆண்டவரே இரக்கமாயிரம் பாடலுக்குப் பின்னர் சொல்ல வேண்டியது)

நற்கருணை, குருத்துவம் ஆகிய மிகப் பெரிய இரு தருவருட்சாதனத்தை தந்த இறைவனை நன்றியோடு புகழ்ந்து துதிக்க, ஆலய மணிகள் ஒலிக்க, ‘உன்னதங்களிலே’ என்ற வானவர் கீதத்தை மகிழ்வுடனே பாடிப் போற்றுவோம்.

(வாசகங்களுக்கு முன்னுரை)

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்து நாம், நினைத்து கொண்டாடிவரும், பாஸ்கா விழாவின் விளக்கத்தை விடுதலை பயண நூலில் இருந்து முதல் வாசகமாக தரப்பட்டுள்ளது. நற்கருணையை தகுந்த முறையில் உட்கொள்ள பவுல் அடிகளார் கொரிந்து நகர் மக்களுக்கு சொன்ன அறிவுரையை இரண்டாவது வாசகமாகவும், நற்செய்தியில் இராவுணவின் போது நிகழ்ந்த நிகழ்வினை, யோவான் தன்னுடைய நற்செய்தியில் பதிவு செய்ததை கேட்க உள்ளோம்.

திறந்த மனத்துடன் வாசகங்களுக்கு செவிமடுத்து, உள்ளத்தில் தங்க வைத்து, அசை போட்டு வாழ்வாக்க வரம் கேட்டு மன்றாடுவோம்.

(மறையுரைக்குப் பின்னர்)

‘தம் சொல்லால் எல்லாம் படைத்தார்’ இறைவன். ‘தம் செயலால் எல்லாம் சொன்னார்’ இறைவன். நான் முன்மாதிரிகை காட்டினேன். ‘நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்’, எனக் கூறிய கிறிஸ்து தன் அன்பினை நிறைவாக காட்டிட, சீடர்களின் பாதங்களை தொட்டுக் கழுவி, தன் உடன் பங்காளிகள் என்பதனை உணர்த்தினார். நம்மிடையே உள்ள எந்த வேறுபாடும் நம்முடைய ஒற்றுமையை குலைத்திடக் கூடாது. நம்மை பிரிவின் சக்திகள் அடிமைப்படுத்தி விடக் கூடாது. இத்தகைய உணர்வுகளை நம்மிலே விதைத்திட, நம் மத்தியில் உள்ள 12 பேருக்கு, குரு கால்களை அடையாள முறையில் கழுவி தனது அன்பினை வெளிக்காட்டுகின்றார். நாமும் மனங்களை தூய்மையாக்கி வேற்றுமைகளை வேரறுத்து, ஒற்றுமையின் அடையாளங்களாக வாழ்ந்திட உறுதியெடுத்து அமைதியாக பங்கேற்போம்.

மன்றாட்டுக்கள்:

திருஅவை அன்பர்கள் தங்களது அர்ப்பணத்தை அறிந்து புதுப்பித்து, ஆவியின் துணையோடு பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பந்தியிலே பக்தியுடனே பங்கேற்கும் நாங்கள், பந்தியின் பண்புகளை வாழ்விலும் கடைபிடித்து, எல்லாரும் இன்புற்றிருக்க வழி செய்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாஸ்கா திருவிருந்து தரும் புதிய அன்பு உடன்படிக்கையை, வாழ்விலே கடைபிடித்து, அன்பிற்கு சாட்சிகளாக வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதத்தை தொட்டு கழுவுமளவுக்கு, உம்மை தாழ்த்தி பணிவிடை செய்தது போல நாங்களும், பணிவிடை செய்வதிலே ஆர்வம், அக்கரை, ஈடுபாடு கொண்டிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

(மன்றாட்டுக்குப் பின்னர்)

இன்றைய நாளில் நாம் காணடுடியாத அன்பர்களுக்கும், நம்முடைய அன்பினை வெளிப்படுத்திட திருச்சபை நம்மை அழைக்கின்றது. பசிப்பிணினால் வாடும் மாந்தர்களுக்கு உதவிட, சிறப்பு காணிக்கை எடுக்கப்படுகின்றது. சின்னஞ்சிறியவர்களுக்கு உதவிடும் போது எனக்கே உதவுகின்றீர்கள் என்ற அழைப்பை ஏற்று, தாராளமாக உதவிட முன்வருவோம். அப்பொமுது என்மகிழ்ச்சியில் கலந்து கொள் என்ற இறைவாக்கு நம்மிலே நிறைவு பெறும். நற்கருணை கொண்டாட்டம் தொடர்கின்றது. தன்பணி தொடர இறைவன் புனிதப்படுத்திய குருக்கள், பலி நிறைவேற்றுகின்றார்கள். பக்தியுடனே பங்கேற்போம். அப்பஇரசத்தோடு நம்மையும் ஓப்புக் கொடுப்போம்.

(நற்கருணை உட்கொண்டப் பின்னர்)

அன்பின் அருட்சாதனமாகிய நற்கருணை பவனியாக அலங்கரிக்கப்பட்ட புதிய பீடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது. ‘என்னோடு விழித்திருந்து செபியுங்கள்’ என்ற இறைமக்களின் அழைப்பின் குரல் கேட்டு, அவரக்காய் நேரம் ஓதுக்கி அவரோடு இருப்போம். ஆராதனைக்கு வைக்கப்பட்டப் பின்னர், பாடகர் குழுவினர் மாண்புயர் என்ற கீதத்தை பாடும் போது, நாமும் இணைந்து பாடுவோம். திருச்சபையின் பரிபூரண பலன் பெறுவோம். இறையாசீர் நிறைவாய் கிடைக்கப் பெறுவோம். பின்னர் பீடம் வெறுமையாக்கப்பட்டு, அலங்காரங்கள் அகற்றப்படும். புனிதர்களின் உருவங்கள் மறைத்து வைக்கப்படும்.

--------------------------------------------
மறையுரைச் சிந்தனை

பெரிய வியாழன்

தன்னையே உணவாகத் தரும் இயேசு


முன்பொரு காலத்தில் சிபிச் சக்ரவர்த்தி என்றொரு சோழ மன்னன் இருந்தான். அவன் மக்களிடத்தில் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிக்க அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் மாலைநேரம் சிபி அரண்மனை மேல்மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார். அப்போது பறவை ஒன்று உயிருக்குப் பயந்து கிரீச்சிடுவதுபோல் சத்தம் வந்தது. திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே ஒரு வல்லூறு ஒரு புறாவைத் துரத்திக் கொண்டு செல்வதையும் உயிருக்குப் பயந்து புறா கத்தியபடி பறப்பதையும் கண்டார். இன்னது செய்வது என அறியாது திகைத்தபடி நின்றிருந்த சிபியின் முன் வந்து விழுந்தது அந்தப் புறா. அதைக் கையில் எடுத்து அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார் சிபிச் சக்ரவர்த்தி. சற்றுநேரத்தில் அதைத் துரத்திவந்த வல்லூறும் அங்கு வந்து அரசர் முன் அமர்ந்தது. அதைக் கண்டு திகைத்த சிபி தன் கையில் இருந்த புறாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வல்லூறு வாய் திறந்து பேசியது.

"அரசே! இந்தப் புறா எனக்குச் சொந்தம். இதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்". மன்னன் ஆச்சரியத்துடன் பார்த்தான். மீண்டும் வல்லூறு அரசனிடம் பேசியது, "இந்தப் புறா இன்று எனக்கு உணவாக வேண்டும். நான் பசியால் தவிக்கிறேன்". அதை சிபி அன்புடன் பார்த்தான். "ஏ! பறவையே உன் பசிக்காக இந்த சாதுவான பறவையை உனக்கு உணவாகத் தரமாட்டேன்” என்றான். "அப்படியானால் என் பசிக்கு என்ன வழி அரசே?" என்றது வல்லூறு. சக்ரவர்த்தி சற்று நேரம் சிந்தித்தான். ஊனுக்கு ஊனைத்தான் தரவேண்டும். வேறு உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. என்ன வழி என் சிந்தித்தான். சற்று நேரத்தில் முகம் மலர்ந்தான். "உனக்கு உணவாக என் மாமிசத்தையே தருவேன் உண்டு பசியாறுவாய்" என்று சொன்னவன் காவலரை அழைத்து ஒரு தராசு கொண்டு வரச் சொன்னான். ஒரு தட்டில் புறாவை வைத்தான். அடுத்த தட்டில் தன் உடலிலிருந்து மாமிசத்தை அரிந்து வைத்தான். ஆச்சரியம் என்னவென்றால் எவ்வளவு தசையை அரிந்து வைத்தாலும் புறாவின் எடைக்கு சமமாகவில்லை. எனவே சிபிச் சக்ரவர்த்தி தானே அந்தத் தராசில் ஏறி அமர்ந்தான். தட்டு சமமாகியதும் மன்னன் மகிழ்ந்தான். “ஏ பறவையே இப்போது நீ என் தசையை உனக்கு உணவாக்கிக் கொள்" என்றவுடன் அங்கிருந்த வல்லூறும் புறாவும் மறைந்தன.

மறுகணம் அங்கே இறைத்தூதர்கள் இருவர் தோன்றினர். அவர்கள் மன்னனிடம், "சிபிச் சக்ரவர்த்தியே! உமது நேர்மையையும் கருணை உள்ளத்தையும் பரிசோதிக்கவே நாங்கள் பறவையாக வந்தோம். உமது உள்ளம் புரிந்தது. உலகம் உள்ளளவும் உமது புகழ் நிலைப்பதாக. நீர் பல்லாண்டு வாழ்க" என வாழ்த்தி மறைந்தனர். அழகிய உடலை மீண்டும் பெற்ற மன்னன் பல்லாண்டு புகழுடன் வாழ்ந்தான்.

சங்ககால இலக்கியங்களுள் ஒன்றான புறநானுற்றில் இடம்பெறக்கூடிய இந்த நிகழ்வு ஒரு சாதாரண புறாவிற்காக தன்னையே தந்த சிபிச்சக்கரவர்த்தி என்ற சோழ மண்ணின் கருணை உள்ளத்தை நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. ஆண்டவர் இயேசுவும் நம்மீது கொண்ட பேரன்பினால் தன்னையே உணவாக, நற்கருணை வடிவில் தருகின்றார். அதைத்தான் இன்று ‘பெரிய வியாழனாக’ வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றோம்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் - இன்றைய இரண்டாம் வாசகத்தில் – கூறுவதுபோல, ஆண்டவர் இயேசு தான் காட்டிக்கொடுப்பதற்கு முந்தின இரவு, அப்பத்தைக் கையில் எடுத்து, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். பின்னர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைநிறுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்கின்றார். ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும் பானமாகவும் தருகின்றபோது, இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்கின்றார். அப்படியானால், இயேசுவைப் போன்று நாமும் நம்முடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் மானுட மீட்புக்காகத் தரவேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற செய்தியாக இருக்கின்றது. ஆகவே, ஆண்டவர் இயேசுவின் நற்கருணை விருந்தில் பங்குகொள்ளக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று நம்மையும் பிறருக்காகக் கையளிக்கத் தயாராக இருக்கவேண்டும். அதுவே சரியான செயல்.

“தன்னலம் மறுத்துப் பொதுநலத்துக்காகத் தன்னையே கையளிப்பவர்கள்தான் ஒப்பற்ற தலைவர்கள்” என்பார் சேகுவேரா. அந்த வகையில் பார்க்கும்போது இந்த மானுட சமூகம் வாழ்வுபெற என்பதற்காக தன்னையே உணவாகத் தந்த இயேசுவும் ஒப்பற்ற தலைவர்தான்.

எனவே நாமும் இயேசுவைப் போன்று பிறர் வாழ நம்மைக் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

FR.Maria Antonyraj, Palayamkottai.