8 மில்லியன்ரூபாவில் அமைக்கப்பட்ட யா/மண்டைதீவு றோ.க. வித்தியாலய புதிய கட்டட திறப்பு விழா
யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஊடாக இந்திய மத்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகாண கல்விபண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து 8 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட போரினால் சிதைவடைந்த யா/மண்டைதீவு றோ.க. வித்தியாலயத்தின் புதியகட்டடத் திறப்பு விழா 02.07.2018 அன்று காலை 8.30 மணியளவில் தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும் மண்டைதீவு - அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளைடேவிற் அடிகளாரின் ஆசியுரையுடன், பாடசாலை அதிபர் திரு. ஜோண் கொலின்ஸ் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் பாடசாலை சமூகத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு நன்றித் திருப்பலியைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மாலை அணிவித்து, மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துவரப்பட்டு, மங்கலவிளக்கேற்றலைத் தொடர்ந்து, தேசியக் கொடியினை வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் S. சத்தியசீலன் அவர்களும், வடக்கு மாகாணசபைக் கொடியினை கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ க. சர்வேஸ்வரன் அவர்களும், பாடசாலைக் கொடியினை அதிபர் திரு. ஜோண் கொலின்ஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்தின் பெயர் பலகையினை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமான் சங்கர் பாலச்சந்திரன் அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்து, பாடசாலையின் அதிபர் அலுவலகத்தினையும் நாடாவை வெட்டி திறந்துவைக்க, தொடர்ந்து வகுப்பறைகளை கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ க. சர்வேஸ்வரன், யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம் மற்றும் வடக்கு மாகாண மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு. செ. உதயகுமார் ஆகியோரும் நாடாவினை வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றனர்.

இந் நிகழ்வில் தீவக வலய வலயக்கல்வி பணிப்பாளர் திரு. ஆ.இளங்கோவன் மற்றும் தீவக வலய பிரதி வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சாரதாதேவி கிருஸ்ணதாஸ், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நலன் விரும்பிகள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வின் பதிவுகள் சிலவற்றைப் படங்களில் காணலாம்.