முதல் வாசகம்
அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும்புயலை அறுப்பார்கள்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7,11-13ஆண்டவர் கூறுவது: இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர். எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள்.
பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 9ய)
பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார். 4 அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! - பல்லவி
5 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை; 6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. - பல்லவி
7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை. 8 அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். - பல்லவி
9 இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 10 ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 14
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38
அக்காலத்தில் பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, ``இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை'' என்றனர். ஆனால் பரிசேயர், ``இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.
அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம்
மன்றாடுங்கள்'' என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
-------------------------------------------
மறையுரைச் சிந்தனை (ஜூலை 10)
நம்மீது பரிவுகொள்ளும் இயேசு!
கரிசல்பட்டி என்ற ஊரில் வேலுச்சாமி என்ற ஒருவர் இருந்தார். அந்த வேலுச்சாமியின் வீட்டருகே ஒரு மளிகைக் கடை இருந்தது. மளிகைக் கடையின் சொந்தக்காரர் வேலுச்சாமிக்கு தூரத்து உறவு. தன் வீட்டுக்கு வாங்க வேண்டிய மளிகைச் சாமான்களை அந்தக் கடையிலேயே வாங்கிக் கொள்வார்.
வேலுச்சாமிக்கு ராஜா என்றொரு மகன் இருந்தான். அவன் அவ்வூரில் இருந்த பள்ளிக்கூடத்தில் ஆறாவது வகுப்பு படித்து வந்தான். ராஜாவிடம் வித்தியாசமான வழக்கம் ஒன்று இருந்தது. அது என்னவென்றால், அவனுடைய தந்தை அவனிடத்தில் பொருள் வாங்கி வரச் சொன்னால், அருகிலுள்ள அந்தக் கடையில் வாங்காமல் தெருவைத் தாண்டி எதிர்த் தெருவிலுள்ள ஒரு சிறிய கடைக்குப் போய் சரக்குகளை வாங்கி வருவான். பக்கத்திலுள்ள கடைக்குச் செல்லாமல் அடுத்த தெருவிலுள்ள கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவதால் கால தாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் இப்படிக் காலதாமதவாதைக் கவனித்தார் ராஜாவின் அப்பா வேலுச்சாமி.
ஒரு நாள் வேலுச்சாமி ராஜாவிடம், "ஏண்டா ராஜா! கடைக்கு அனுப்பினால் ஏன் உனக்குத் திரும்பி வர இவ்வளவு தாமதமாகிறது?'' என்று கேட்டார். ராஜாவும் தான் அடுத்த தெருவிலுள்ள கடைவரை செல்வதை விவரித்துக் கூறினான்.“அவ்வளவு தூரம் சென்று பொருட்களை வாங்கிவரணுமா? அதுவும் பக்கத்துக் கடைக்காரர் நமக்கு தூரத்துச் சொந்தம்!'' எனச் சொன்னார். அதற்கு ராஜா, "அப்பா! இங்கிருக்கிற கடையில் நல்ல வியாபாரம் நடக்குது. நான் சரக்கு வாங்கி வருகிற கடைக்காரரோ மாற்றுத் திறனாளி. இரு கால்களும் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலியில் இருந்து வியாபாரம் பார்க்கிறார். வியாபாரமும் சுமாராத்தான் நடக்குது. அங்கு சென்று வாங்கறதனாலே அவருக்கு உதவுகிற மாதிரி இருக்கு! இதில் சொந்தம் எல்லாம் அப்புறம்தான்‘' என்றான்.
மகன் இவ்வாறு பேசுவதைக் கேட்டு, அவனுடைய கருணையுள்ளத்தை அறிந்து மகிழ்ந்தார் வேலுச்சாமி.
மிகச் சிறிய வயதினனானாலும் ஒரு மாற்றுத் திறனாளி மீது ராஜா கொண்ட பரிவுள்ளம் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, நகர்கள் சிற்றூர்கள் என்று சுற்றிவருகின்றார். அப்படிச் சுற்றிவரும்போது எங்கும் விண்ணரசைப் பற்றி அறிவித்துக் கொண்டு வருகின்றார்; நோயாளிகளைக் குணப்படுத்துகின்றார். இவை எல்லாற்றையும் விட ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்த மக்கள்மீது பரிவுகொள்கின்றார். இயேசு மக்கள்மீது பரிவு கொண்டார் என்று சொல்லும்போது அவர்களுடைய பிரச்சனையை தன்னுடைய பிரச்சனையாகவே பார்த்து, அவற்றைத் தீர்க்க வழிவகை செய்தார் என்று சொல்லவேண்டும்.
நற்செய்தி வாசகத்தில், மக்கள் ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்தார்கள் என்று வாசிக்கின்றோம். காலம் முழுவதும் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆயன் என்று யாருமே இல்லை. ஒருவேளை ஆயன் – தலைவன் – இருந்தாலும் தன்னுடைய வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிக்கொண்ட ஆயனாக இருந்தானே ஒழிய, மக்கள்மீது அக்கறை கொள்ளாத, பரிவுகொள்ளாத ஆயனாகவே இருந்தான். இதனை நன்கு உணர்ந்த இயேசு, உண்மையான, நல்ல ஆயனைப் போன்று செயல்படுகின்றார். அதன் வெளிப்பாடாக அவர் மக்களுக்கு விண்ணரசைப் பற்றியும் விண்ணகத் தந்தையினுடைய அன்பைப் பற்றியும் போதிக்கின்றார்.
இயேசு மக்களிடத்தில் விண்ணரசைப் பற்றியும் கடவுளுடைய அன்பைக் குறித்தும் எடுத்துச் சொன்னது, அவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். ஏனென்றால் மக்கள் அனுதினமும் பட்ட கஷ்டங்கள் அப்படி.
இயேசு மக்களுக்கு விண்ணரசைப் பற்றிப் போதித்தது அவருடைய பரிவுள்ளத்தின் ஒரு பக்கம் என்றால், அவர் மக்களிடத்தில் இருந்த நோயாளிகளைக் குணப்படுத்தியது அவருடைய பரிவுள்ளத்தின் இன்னொரு பக்கம் என்றுதான் சொல்லவேண்டும். காரணம் இயேசுவின் காலத்தின் வாழ்ந்த போதகர்கள் வெறுமனே போதித்தார்களே ஒழிய, போதித்ததை வாழ்ந்து காட்டவில்லை. ஆனால், ஆண்டவர் இயேசு அப்படியில்லை. அவர் போதித்தார் அதனை வாழ்ந்து காட்டவும் செய்தார்.
நாம் இயேசுவைப் போன்று நம்மோடு வாழக்கூடிய எளியவர், வறியவர்கள், சமுதாயத்தில் விளிம்புநிலையில் இருப்போர் இவர்கள்மீது பரிவுகொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொலோசையருக்கு எழுதிய மடலில், “நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்; அவரது அன்பிற்குரிய இறைமக்கள். ஆகவே அதற்கிசைய பரிவு, இரக்கம்... ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்: (கொலோ 3:12) என்று கூறுவார். ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்மை பரிவினால் அணிசெய்ய வேண்டும்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று மக்களிடம் பரிவுள்ளம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.